எல்லையில்லா உலகின் மாற்றங்களின் பிடியில் சிக்கித் தவித்து ஒவ்வொரு நாளின் சுவாரஷ்யங்களையும் துன்பக்கோடுகளையும் தாங்கும் சுமை தாங்கியாய் வாழும் மானிட ஜென்மம் நாம். ஒவ்வொரு தவறுகளையும் பெரிதாக்கி, சந்தோஷங்களை முழுமையாக அனுபவிக்க எண்ணாத மனித மனம். என் செய்வது? இறைவன் படைப்பின் விந்தைகளில் இதுவும் ஒன்று. அன்றாட உலகில் இயற்கையின் சீற்றங்களால் ஏற்படும் அழிவுகள் போதாதென்று மானிட மனங்களின் சீற்றங்களினாலும் ஆற்றாமையினாலும் ஏற்படும் அழிவுகள் சொல்லிலடங்காதவை. எம் மனதிற்கு சலனத்தை ஏற்படுத்திய, ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற வடுக்கள் நம் தினசரி வாழ்க்கையில் ஏராளம்.
அண்மைய பேருந்து பகிஷ்கரிப்பு கூட நம் மனதில் சலனத்தை ஏற்படுத்தி விடாமல் இல்லை. காலையில் எழுந்து, அன்றைய நாள் இனிமையான நாளாக அமைய வேண்டும் என நினைத்து கடமைகளைத் தொடங்கிய கொழும்பு வாழ், இல்லையில்லை நகர வாழ்க்கைக்கு அடிமையாகிப் போன பலருக்குத் தெரியவில்லை அன்றைய நாள் ஒரு சோதனை நாள் என்று... வீதிகளிலே காலை நேரத்திலேயே ஒரு வித தேக்கம். ஏதோ ஒருவாறாக நான் இருப்பதற்கு இடம் கிடைக்காமல் நின்றாவது அந்தப் பேருந்தில் இருபது நிமிட பயணத்தை முடித்து சிறு நடை போட ஆரம்பிக்க, அன்றோ பெரிதான தூரத்தை கடப்பது போன்ற உணர்வை உணர்ந்தன என்னைத் தாங்கும் பாதங்கள்...... ஏற்கனவே சீக்கிரமாக வெளிக்கிட்டும் தாமதமாகிப் போனதை உணர்ந்த என் மூளை நரம்புகள் அதனை பாதங்களிற்கு உணர்த்த தானாகவே சீக்கிரமாக நகர ஆரம்பித்தன என் பாதங்கள், அடுத்த ஏமாற்றத்தினை சந்திக்கப் போகிறோம் என்பதை அறியாமல்......
சிறுசாலை வழியோரம் நின்ற, நடந்த களைப்புடன் பெருவீதிக்கு சென்று பஸ்தரிப்பிடத்தை நோக்கியதும் அதிர்ச்சி காத்திருந்து வரவேற்பது போலிருந்தது எனக்கு...... இன்றைய நகர வாழ்க்கையில் ஏதாவது நிகழ்ச்சிகளில் கூட காண முடியாத அதிகளவான மக்கள் தொகையை பேருந்து தரிப்பிடத்தில் கண்டால் யாரின் இதயம் தான் படபடக்காது??? "இவளிற்கு இன்று சோதனை தான்... ம்ஹும்.. " என்று எண்ணியபடி என் மனதினை ஒருமுகப்படுத்தி கட்டளை இட்டேன் எப்படியாவது வருகிற முதல் பேருந்தில் ஏறிவிட வேண்டும் இருப்பதற்கு இடம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. வழமையாக ஐந்து பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை வரும் பேருந்தை 15 நிமிடமாகியும் காணவில்லை. சற்று நேரத்தின் பின் தொலைவில் பேருந்து ஊர்ந்து வருவது தெரிந்தது.... அப்பாடா பஸ் வந்திட்டுது என்று மனதில் ஒருவித மகிழ்ச்சி. பேருந்தினுள் கூட்டமாக இருக்கிறதா இல்லையா என்று ஒரு வித கலக்கம் வேறு... எனக்கு இருப்பதற்கு இடம் கிடைக்குமா இல்லையா என பேதை மனதும் அங்கலாய்ந்தது. எனினும் எப்பிடியாவது பேருந்தினுள் ஏறிவிட வேண்டும். இல்லாவிட்டால் பல்கலைக்கழகத்தினை அடைய முடியாது ஒன்பது மணிக்கு முன்னர்.. :) சரி 8 . 30 இற்குத் தான் போக முடியாது. குறைந்தது ஒன்பது மணிக்கு முன்னராவது ஒப்பம் வைத்து விட வேண்டும் என்ற பேராசை தான்......
தொடரும்.............
